குறுந்தொகை – 28

குறுந்தொகை 28                       பாடலாசிரியர் ஔவையார்
பாலைத்திணை
முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
அலமர லசைவளி யலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே.
                        -ஔவையார்

சொற்பொருள்:

அலமரல - சுழலுதலை உடைய, அசை வளி - அசைந்து வருகின்ற தென்றல் காற்று, அலைப்ப - வருத்தா நிற்க, என் உயவு நோய் அறியாது - எனது வருந்துதலை உடைய காம நோயை உணர்ந்து கொள்ளாமல், துஞ்சும் ஊர்க்கு - கவலையின்றித் தூங்கும் ஊரில் உள்ளாரை, யான், முட்டுவேன் கொல் - முட்டுவேனோ? தாக்குவேன் கொல் - தாக்குவேனோ? ஓர் பெற்றி மேலிட்டு - ஒரு தலைக்கீட்டை மேற்கொண்டு, ஆஅ ஒல்லென - ஆவென்றும் ஒல்லென்றும் ஒலி உண்டாக, கூவுவேன் கொல் - கூப்பிடுவேனோ? ஓரேன் - இன்னது செய்வது என்பதை அறியேன்.



சுழன்று அசைந்து வரும் தென்றல் காற்று வருத்தாது நிற்க, என் தலைவனை நான் பிரிந்து வருந்துவதை உணராமல், தூங்கும் இந்த ஊரில் உள்ளோரை நான்(சுவர் முதலியவற்றில்) முட்டுவேனா?(ஏதெனும் கருவி கொண்டு) தாக்குவேனா? ஓலமிட்டு கூப்பிடுவேனா? என்ன செய்வேன் எனத் தெரியவில்லையே!