குறுந்தொகை - 26

குறுந்தொகை - 26
பாடலாசிரியர் - வெள்ளி வீதியார்
குறிஞ்சித்திணை 
தோழி கூற்று
(தலைவி பித்து பிடித்தது போல இருக்கிறாள். அதற்குக் காரணம் தெய்வக்குற்றம் என கட்டுவிச்சி (குறி சொல்பவள்) சொன்னாலும், உண்மைக் காரணம் அவளது காதல். அவளது தலைவனோடு நட்புடன் இருந்தாள்.. இதற்கு அந்த இடத்தில் இருந்த ஆண்குரங்கு சாட்சி )
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை
பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன் 
தகாஅன் போலத் தான்றீது மொழியினும்

தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே
தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய்
வரையாடு வன்பறழ்த் தந்தைக்
கடுவனு மறியுமக் கொடியோ னையே.

                     -வெள்ளி வீதியார்.

(சொற்பொருள்.) அரும்பு அற மலர்ந்த -அரும்புத் தன்மை இல்லாமல் மலர்ந்த, கரு கால் வேங்கை - கரிய அடியை உடைய வேங்கை மரத்தின், மேக்கு எழு பெரு சினை - மேலே வளர்ந்த பெரிய கிளையில், இருந்த தோகை - இருந்த மயிலானது, பூ கொய் மகளிரின் - அதன் மலரைக் கொய்யும் மகளிரைப் போல, தோன்றும் நாடன் - தோன்றுதற்கு இடமாகிய நாட்டை உடைய தலைவன், தகாஅன் போல - இவளுக்கு உரியனாகும் தகுதி இல்லான் என்பது போல, தான் - கட்டுவிச்சி, தீது மொழியினும் - தெய்வத்தால் வந்ததென்று தீங்கானதைக் கூறினும், தேன் கொக்கு - தேமாவின் கனியை, அருந்தும் - உண்ணுகின்ற, முள் எயிறு துவர் வாய் - முள்ளைப் போன்ற கூரிய பற்களையும் செவ்விய வாயையும் உடைய, வரை ஆடு - மலைகளில் விளையாடும், வன் பறழ் தந்தை - வலிய குட்டியின் தந்தையாகிய, கடுவனும் - ஆண் குரங்கும், அ கொடியோனை - அந்தக் கொடியவனாகிய தலைவனை, அறியும்- ஆதலின் அது, தன்கண் கண்டது - தன் கண்ணாற் கண்ட நிகழ்ச்சியை, பொய்க்குவது அன்று - காணேன் என்று பொய் சொல்லாதது.                                                                                                             கருத்து
அரும்புகள் இல்லாமல் மலரும் கரிய அடியை உடைய வேங்கை மரத்தின் மேலே வளர்ந்த பெரிய கிளையில் இருந்த மயிலானது, அதன் மலரைப் பறிக்கும் மகளிரைப் போல தோன்றுவதற்கு இடமான நாட்டை உடைய தலைவன், இவளுக்கு தகுதியானவன் அல்ல என்பதுபோல கட்டுவிச்சி(குறி சொல்பவள்) தீது கூறினும், தேமாவின் கனியை உண்ணும் . முள்ளைப் போன்ற கூரிய பற்களையும், சிவந்த வாயையும் உடைய, மலைகளில் விளையாடும் வலிய குட்டியின் தந்தையான ஆண் குரங்கும் அந்தக் கொடியவனான தலைவனை அறியும். அது தனது கண்ணால் கண்டதை பொய் எனச் சொல்லாது. (என்கிறாள் தோழி)

(ஆகவே தலைவியின் நோய்க்குக் காரணம் ஒரு தலைவனோடு செய்த நட்பே ஆகும்.)