குறுந்தொகை 25,

குறுந்தொகை 25,
கபிலர், குறிஞ்சி
திணை 
தலைவி சொன்னது
யாரும் இல்லை; தானே கள்வன்
தான்அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.

பொருள்:   யாரும் இல்லை- (நானும் அவனும் இருந்த இடத்தில்) யாரும் இல்லை. தானே கள்வன்- (என்னைக் களவிலே கலந்த )கள்வனாகிய அவனே என்னோடு இருந்தான்.தான் அது பொய்ப்பின்- அவன் செய்த சூளுரை பொய்யானால், யான் எவன் செய்கோ-யான் என்ன செய்வேன்? தினைத்தாள் அன்ன- தினைப்பயிரின் நீண்டு வளர்ந்த தாளினைப் போல, (தினைப் பயிரின் நீண்ட இலைகளை இன்றும் தாள் என்று கூறுவது நடைமுறையில் உள்ளது.) சிறு பசுங்கால சிறிய பசிய கால்கள், ஒழுகுநீர்-ஓடிச் செல்லும் நீர், ஆரல் பார்க்கும்- ஆரல்மீனின் வருகையைப் பார்த்திருக்கும், குருகும் உண்டு- குருகும் இருந்தது,தான் மணந்த நானும் அவனும் களவில் கூடிய, ஞான்றே- நாளில                         .                                   கருத்து
தலைவன் என்னைப் பிறர் அறியாதவாறு காண வந்தபோது என்னோடு கூடியிருந்தான். அப்போது அங்கே யாரும் இல்லை. என் நலன் நுகர்ந்த கள்வனாகிய தலைவன் மட்டுமே இருந்தான். (பிறர் அறியாதவாறு கூடியிருந்த தலைவன்,இன்று பிறரறிய மணம் செய்து கொள்ள காலம் நீட்டிக்கின்றான் என்றமையால் கள்வன் என்றாள் போலும்!)
 அவன் என்னிடம் செய்து கொடுத்த உறுதி மொழியிலிருந்து தவறினான் என்றால் நான் என்ன செய்வேன்?நான் அவனோடு இருந்த நாளில், அங்கே ஓடுகின்ற நீரில் செல்லுகின்ற ஆரல் மீனின் வருகையைப் பார்த்துக் கொண்டு, தினைத்தாளைப் போன்ற சிறிய பசுங்கால்களையுடைய குருகும் இருந்தது. (குருகுகூட எங்களைப் பார்க்கவில்லை.மீனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது என்று சொல்லும் போது சாட்சியாகக் கூட ஒருவரும் இல்லையே என்று மனம் குமுறும் ஒரு சாதாரண பெண்ணைப் பார்க்க முடிகிறது. சரி, பேசக்கூடிய சக்தியாவது குருகுக்கு இருக்குமானால் அவன் என்னிடம் சொன்ன உறுதிமொழியையாவது அது கூறும். அதுவும் இல்லையே.)