குறுந்தொகை - 17

குறுந்தொகை - 17

குறிஞ்சித் திணை
இயற்றியவர் : பேரெயி முறுவலார்
(தலைவியிடம் சொல்லி அழைத்துவா என்று அவன் தோழியிடம் கூறும்போது தோழி மறுக்காமல் இருக்க இச் செய்தியைச் சொல்கிறான். அழைத்துவராவிட்டால் மடலேறுதல் ஊர்வழக்கம் என்று சொல்லி அச்சுறுத்துகிறான்.)

செய்யுள்-
மாவென மடலு மூர்ப பூவெனக்
குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப    
மறுகி னார்க்கவும் படுப    
பிறிது மாகுப காமங் காழ்க் கொளினே.

                        - பெரெயி முறுவலார்

சொற்பொருள்:
மா-குதிரை , மடல் - பனை மடல், எருக்கங்கண்ணி -எருக்கம் மாலை, மறுகின் - ஊர் தெருவில் , ஆர்க்க - சிரிக்க , பிறிதும் ஆகுதல் - உயிர் விடல்

கருத்து:

ஓடும் குதிரை என ஓடாத பனைமடல் குதிரையில் ஏறுவர், சூடக்கூடிய மாலை என மலராத மொட்டு எருக்கமாலையை சூடுவர், அப்படியே வீதியில் தோன்றி பிறரால் நகைக்கபடுவர், அப்படியும் வெற்றி ஆகாதபோது சாகவும் துணிவர் , காதல் நோய் கொண்டவர்கள் .

மடலேறுதல்:
மடல் என்பது இங்குப் பனைமட்டையைக் குறிக்கும். பனைமட்டைகள் கறுக்குகள் கொண்டவை. பல்லுப் பலாக இருக்கும் அந்தக் கறுக்குகள் உடம்பில் படும்போது கிழித்து இரத்தம் வரும். இந்தப் பனைமட்டைகளால் குதிரை உருவம் செய்வர். அதில் தலைவன் ஏறிக்கொள்வான். தோழர் குதிரையை இழுத்துக்கண்டு தலைவி வாழும் ஊரில் தெருத்தெருவாகச் செல்வர். தலைவன் தான் விரும்பும் தலைவியின் பெயர் எழுதிய ஓவியம் ஒன்றை வைத்திருப்பான். அதனைப் பார்த்த ஊர்மக்கள் தலைவன் தலைவி உறவைப் பற்றிப் பேசுவர். அவனுக்கு அவளை மணம் முடிக்குமாறு அவளது பெற்றோரிடம் கூறுவர்.