குறுந்தொகை 18,

குறுந்தொகை 18,
கபிலர்,
குறிஞ்சித்திணை
தோழி தலைவனிடம் சொன்னது
(இரவுப் பொழுதில் தலைவனும் தலைவியும் சந்திக்கத் திட்டமிட்டுள்ள இடத்தில். தலைவியைச் சந்தித்துப் பிரியும் தலைவனிடம்,  தலைவியின் வருத்த நிலையைச் சொல்லி அவளை விரைந்து மணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகின்றாள் தோழி)
 
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே!

பொருள்:   வேரல் வேலி மூங்கில்வேலி, வேர்க்கோட்டு வேரிலுள்ள கொம்புகளில், பலவின் பலா மரத்தின், சாரல் நாட- மலை நாட்டவனே, செவ்வியை வரைந்து (மணம் செய்துகொள்ளும்) கொள்ளும் காலத்தை, ஆகு உண்டாக்கு, மதி-(அசைச்சொல்), யார் அஃது அறிந்திசினோரே யாரால் தலைவியின் இந்நிலையை அறிந்துகொள்ள முடியும், சிறுகோட்டு- சிறிய கொம்பிலே, பெரும்பழம் பெரிய பலாப்பழம், தூங்கி ஆங்கு- தொங்கிக் கொண்டிருந்தவாறு,  இவள்-தலைவி, உயிர் தவச் சிறிது உயிர் மிகச் சிறியது, காமமோ பெரிதே விருப்பமோ பெரியதே


மூங்கிலை வேலியாகக் கொண்ட, வேரிலுள்ள கொம்புகளில் பழங்கள் தொங்கும் வேர்ப்பலா மரங்கள் நிறைந்த மலைநாட்டுத் தலைவனே! விரைவில் தலைவியைத் திருமணம் செய்து உனக்கு உடையவளாக ஆக்கிக்கொள்! மலையிலே, சிறிய கொம்புகளிலே பெரிய பலாப்பழம் தொங்குவது போல,  தலைவியின் உயிர் ஆகிய கொம்பு வலிமையற்றுச் சிறியதாய் உள்ளது;  ஆனால் இவளின் காமநோய் என்னும் பழமோ மிகவும் பெரியதாய் உள்ளது. உன்னைத் தவிர யாரால் தலைவியின் இந்நிலையை அறிந்துகொள்ள முடியும்?