குறுந்தொகை 14


குறுந்தொகை 14
தொல் கபிலர்,
குறிஞ்சி திணை தலைவன் சொன்னது
தலைவியை  அடைய அவளது தோழியின் துணையை நாடிய தலைவனுக்கு உதவ மறுத்த தோழியிடம் தலைவன் கூறியது.

அமிழ்து பொதி செந்நா அஞ்சவந்த
வார்ந்துஇலங்கு வைஎயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ்வூரே! மறுகில்
நல்லோள் கணவன் இவன் எனப்

பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே.
பொருள்:   அமிழ்து பொதி அமிழ்தத்தைப் பொதிந்து வைத்தாற்போன்று (இனிமையான சொற்களைப் பேசும்), செந்நா- சிவந்த நாக்கு, அஞ்ச வந்த அஞ்சுவதற்குக் காரணமான, வார்ந்து இலங்கு நேராக விளங்கும், வைஎயிற்று- கூர்மையான பற்களையுடைய, சின்மொழி அரிவையை- சில சொற்களைப் பேசும்  பெண்ணை, (என் தலைவியை), பெறுகதில் பெறுவதற்கு விருப்பமுடையேன்.  அம்ம கேட்பாயாக. பெற்றாங்கு பெற்றபின், அறிகதில் அறிந்து கொள்ளட்டும்,  அம்ம- கேட்பாயாக, இவ்வூரே- இவ்வூரவர், மறுகில் தெருவில், நல்லோள் கணவன் நல்ல பெண்ணின் கணவன், இவன்  என்று, பல்லோர் கூற-பல பேரும் சொல்ல, யாஅம்- நானும் தலைவியும், நாணுகம்-நாணமடைவோம், சிறிதே- சிறிது பொழுது


அமிழ்தத்தைப் பொதிந்து வைத்தாற்போன்று இனிமையான சொற்களைப் பேசும் சிவந்த நாக்கு அஞ்சுவதற்குக் காரணமான, நேராக விளங்கும், கூர்மையான பற்களையுடைய, சில சொற்களைப் பேசும்  பெண்ணான என் தலைவியை, பனைமட்டையால் செய்த மடல் மேலே ஏறிக்கொண்டு உன் ஊருக்கே வருவேன். அப்போது ஊரிலுள்ளவர்கள் அனைவருக்கும் உண்மை தெரியவரும். தெருவெல்லாம் இந்த நல்லவளின் கணவன் இவன் என்று பேசுவர். அதைக் கண்டு எனக்குக்கூட அவளைப் போல நாணம் சிறிது வரும். என்றாலும் இந்த வழியில் நான் என்னவளைப் பெறுவது உறுதி. - இப்படி அவன் தோழியிடம் சொல்லி அச்சுறுத்துகிறான்.