குறுந்தொகை 13

குறுந்தொகை 13,
கபிலர், குறிஞ்சி திணை
தலைவி தோழியிடம் சொன்னது

மாசுஅறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே- தோழி!
பசலை ஆர்ந்த , நம் குவளை அம் கண்ணே.
பொருள்:   மாசு அற- புழுதி இல்லாமல், கழீஇய கழுவப்பட்ட, யானை போல- யானையைப் போல, பெரும்பெயல்-பெருமழை, உழந்த-அலைத்த, இரும்பிணர்-கரிய சொரசொரப்பான, துறுகல்-பாறை (மலையின் சிறு பகுதி),பைதல்- ஈரம்,  ஒருதலை- ஒரு பக்கம், சேக்கும்- கூடும், நாடன்- தலைவன், நோய் தந்தனனே-நோய் தந்துவிட்டனனே, பசலை ஆர்ந்த- பசலை படர்ந்த, நம் குவளை நம்முடைய குவளை போன்ற , அம் கண்ணே- அழகிய கண்ணே

தோழி!  பெருமழை பொழிந்ததால் மாசு  நீங்கிய ஈரமான சொரசொரப்பான  கரிய பாறைக்கல்,  புழுதி நீங்கி சுத்தம் செய்யப்பெற்ற யானையைப் போல காட்சியளித்தது.  அந்தக் கல்லின் குளிர்ச்சியான ஒரு புறத்தே நானும் அவனும் கூடி இருந்தோம்.  அவன் தான் எம்மைப் பிரிந்து துன்பம் தந்தான்.  அதனால் குவளை மலர் போன்ற எம் அழகிய கண்களில் பசலை படர்ந்தன.