குறுந்தொகை 12

குறுந்தொகை 12, 
ஓதலாந்தையார்,
பாலை திணை தலைவி சொன்னது
தலைவன் பிரிவைப் தலைவி தாங்கமாட்டாள் என்று கவலைப்பட்ட தோழிக்குத் தலைவி சொல்கிறாள்.

எறும்பி அளையின் குறும்பல் சுனைய
உலைக் கல் அன்ன பாறை ஏறிக்
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்பவர் தேர் சென்ற ஆறே
அது மற்ற அவலம் கொள்ளாது
நொதுமல் கழறும் இவ் அழுங்கல் ஊரே.

பொருள்:  எயினர் -வேடர், பகழி-அம்பு, மாய்க்கும்-கூர் தீட்டும் ,நொதுமல் கழலும்-இளக்காரமான சொற்களை கூறும், குறும்பல் சுனை-குறுகிய சுனை (மலையில் வடியும் சிறிய நீர் ஓடை), எறும்பி-எறும்பு, உலைக்கல்-வெப்பமான கல், எறும்பி அளையின் எறும்பின் வளைகளைப்போல்,  குறும்பல் சுனைய சிறிய பல சுனைகள்,  உலைக்கல் அன்ன கொல்லனது உலைக்கல்லைப்போல் வெட்பமுடைய,  பாறை ஏறிக் பாறை மீது ஏறி, கொடுவில் எயினர் கொடிய வில்லையுடைய எயினர்கள் பாலை நிலத்தில் பிறரை துன்புறுத்துவோர்,  பகழி மாய்க்கும் அம்புகளைத் தீட்டும்,  கவலைத்து கடினமான் வளைந்தப் பாதைகளில்,  என்பவர் என்னுடையவர், சென்ற ஆறே சென்ற வழி, அதுமற்ற அவலம் கொள்ளாது -  என்னுடைய துன்பத்தை அறியாது,  நொதுமல் கழறும் பழிக்கும் சொற்கள் கூறும்,  இவ் இந்த, அழுங்கல் ஊரே ஆரவாரமுடைய ஊர்

அவர் சென்ற பாலை நிலத்தில் எறும்பு வளைகள் போன்று ஆழமுள்ள சிறிய சுனைகள் பல இருக்குமாம். கொல்லன் உலைக்களத்தில் இரும்பை அடிக்கும் பணைக்கல்லைப் போன்ற வெட்பமுடைய பாறைகளின்மேல் ஏறி எயினர் கொடிய அம்புகளை எய்யும் மலைப்பிளவுகள் இருக்குமாம்.. அதுப்பற்றி வருந்தாது ஆரவாரமுடைய இந்த ஊர் பழிச்சொற்களைக் கூறுகின்றது,.


அவர் சுனையில் தவறி விழுந்துவிடுவாரோ? அவர்கள் எய்யும் அம்பு அவர்மீது தவறிப் பாய்ந்துவிடுமோ? - இதுதான் கவலை என்கிறாள் தலைவி.