குறுந்தொகை 11

குறுந்தொகை 11                         இயற்றியவர் : மாமூலனார் 
பாலைத் திணை- 
தலைவி தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படியாக 

(தலைவன் அருகில் இல்லை.வேறு மொழி வழங்கும் வடநாட்டில் அவன் இருப்பினும் அவன் இருக்கும் இடத்திலேயே நான் இருக்க விரும்புகிறேன்....என தன் நெஞ்சினிடத்தில் உரைப்பதுபோல தோழியிடம் அவள் கூறுகிறாள்)

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி,
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே
எழு, இனி வாழி, என் நெஞ்சே! -  முனாது
குல்லைக்கண்ணி வடுகர் முனையது
வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின், அவருடைய நாட்டே!

சொற்பொருள்


கோடு-சங்கு,ஈர் இலங்கு-அறுத்து செய்யப்பட்ட, வளை நெகிழ -வளையல் கையில் இருந்து நழுவுதல், கலி இழும் -கலங்கி அழுவுதல்,ஈங்கு-இங்கு, உறைதல்-இந்த இடத்தில் இருத்தல், உய்குவம்-தப்பிப்போம், எழுவினி =எழு+இனி ,முன்று-முற்படு, குல்லை-கஞ்சகுல்லை எனும் செடி, வடுகர்-வேங்கடத்தின் வடக்கில் வாழும் வேடர்கள், கட்டி - கங்க நாடு,மொழி பெயர்-வேற்று மொழி, வழிபடல் சூழ்ந்து - அவர் இருக்கும் இடம் செல்ல நினைத்தல்
கருத்துரை    
தன் நெஞ்சுக்குச் சொல்கிறாள்.

நெஞ்சே! இங்கு இருந்தது போதும். சங்கை அறுத்துச் செய்த வளையல்கள் கையிலிருந்து நழுவுகின்றன. ஒவ்வொரு நாளும் உறங்காமல், அழுத கண்களுடன் இவ்விடத்திலேயே வாழ்ந்து புலம்பிக்கொண்டிருப்பது போதும். இங்கிருந்து தப்பிப்போம். என் நெஞ்சே ! இனி, வேற்று மொழி புழங்கும் நாட்டில் , குல்லைப்பூ மாலையணிந்த வடுகரை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் கட்டி என்பவனின் நல்ல நாட்டுக்குச் செல்வோம்.

என் காதலன் இல்லாத இந்த இடத்தில் இருந்து அழுவதை விட ,வேற மொழி பேசுற இடத்தில் இருக்கிற அவனை அடையலாம் என்று தன் தோழியிடம் கூறுகிறாள் தலைவி.

வரலாறு

இந்தக் கட்டி என்னும் அரசன் சுமார் 345-525 ஆண்டுகளில் வாணவாசியில் இருந்துகொண்டு ஆட்சிபுரிந்துவந்த கடம்பர் இனத்தவரின் மூதாதை.