குறுந்தொகை 9

குறுந்தொகை 9,
கயமனார், 
மருதத் திணை -  தோழி தலைவனிடம் சொன்னது




யாய் ஆகியவளே மாயோளே
மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய் சாயினளே
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இன மீன் இருங்கழி ஓதம் மல்கு தொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம் முன்  நாணிக் கரப்பு ஆடும்மே.

பொருள்:  
யாய் ஆகியவளே  நல்ல பண்பு உடையவள்,  மாயோளே மாமை நிறத்தை உடையவள்,  மடை பூண்,  மாண் மாட்சியுடைய, செப்பில் பெட்டியில்,  தமிய தனியாக,  வைகிய வாடிய,  பெய்யாப் பூவின் அணியாத மலர்களைப்போல், மெய் சாயினளே உடம்பு வாடியவள்,  பாசடை பசுமையான இலைகள்,  நிவந்த மேலே,  கணைக்கால் தடித்த காம்பு, நெய்தல் குவளை மலர்கள், இனமீன் மீன் கூட்டம்,  இருங்கழி நெய்தல் நில உப்பங்கழி, ஓதம் வெள்ளம், மல்கு தொறும் நிறையும் பொழுது, கயம் மூழ்கு மகளிர் குளத்தில் குளிக்கும் பெண்கள்,  கண்ணின் மானும் கண்களைப் போன்று, தண்ணந் துறைவன் நெய்தல் நிலத்தலைவன்,  கொடுமை கொடுமை, நம் முன்  நாணி நம்  முன்னால் அவமானப் பட்டு,  கரப்பு ஆடும்மே அதை மறைப்பாள்


மா நிறமான என் தோழி மிக நல்ல பண்புடையவள்.  நீர் நிறைந்த அழகான செப்பு குவளையில் தனியே வைக்கப்பட்ட சூடாத பூவை போன்று உடல் மெலிந்தவள்.  குவளை மலர்கள்  பசுமையான இலைகளுக்கு மேல் தம்முடைய உரமான காம்புகளுடன் திகழ்கின்றன. மீன்கள் கூட்டமாக உப்பங்கழியில் வருவதற்கு காரணமான,வெள்ளம வரும்போது, அம்மலர்கள் நீரில் மூழ்கும். அந்தக் காட்சியானது ஆழமான குளத்தில் மூழ்கிக்குளிக்கும் பெண்களைப் போன்று இருக்கும், அத்தகைய நீர்துறையை உடைய நெய்தல் நிலத்தின் தலைவனின் கொடுமையை அவள் நம்மிடம் மறைக்கின்றாள், நாணத்துடன்.தலைவன் தன்னை பேணாது பரத்தையைப் பேணும் கொடுமையை நம்மிடம் மறைத்துப் பேசுகிற தலைவியாகிய இவள் கற்பு பூண்டவள்..