குறுந்தொகை 8

குறுந்தொகை 8,
ஆலங்குடி வங்கனார்,
மருதத் திணை பரத்தை ஒருத்தி தன்னை நாடி வரும் தலைவனைப்பற்றி சொன்னது

கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்மில்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே.





பொருள்:  

கழனி வயல், மாஅத்து மாமரம், விளைந்து உகு பழுத்து விழும், தீம்பழம் இனியப் பழம், பழன குளம், வாளை வாளை மீன், கதூஉம் கவ்விக் கடிக்கும், ஊரன் ஊரைச்சார்ந்தவன், எம்மில் என்னுடைய இல்லத்தில், பெருமொழி கூறி பெரிய வார்த்தை கூறி, தம்மில் தன்னுடைய இல்லத்தில், கையும் காலும் தூக்கத் தூக்கும் கையையும் காலையும் தூக்குவான், ஆடிப் பாவை போல ஆடும் பொம்மையைப் போல்/கண்ணாடி முன் ஆடும் பாவை என்றும் கொள்ளலாம், மேவன செய்யும் விரும்புவதைச் செய்வான், தன் புதல்வன் தாய்க்கே தன்னுடைய மனைவிக்கு

செய்யுள் கருத்து

வயலில் உள்ள மாமரத்திலிருந்து விளைந்து விழும் இனியப் பழத்தைக்  குளத்தில் உள்ள வாளை மீன்கள் கவ்விப் பிடிக்கும் நாட்டவன், என்னுடைய வீட்டில் பெரிய பேச்சைப் பேசுவான்.  ஆனால் தன் வீட்டில் தன் மனைவிக்கு கையையும் காலையும் தூக்கித் தூக்கி ஆட்டும் பொம்மையைப்போல் பணி செய்வான்,