குறுந்தொகை 4

குறுந்தொகை 4,
இயற்றியவர் : காமஞ்சேர் குளத்தார்,
நெய்தல் திணை,
தலைவி சொன்னது



நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே
இமை தீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே.

அருஞ்சொற்பொருள்

நோம் என் நெஞ்சே – நோகும் என் நெஞ்சே, நோம்என் நெஞ்சே – நோகும் என் நெஞ்சே, இமை – இமைகள், தீய்ப் பன்ன – சுடுவதைப் போல்,  கண்ணீர் தாங்கி -கண்ணீரை துடைத்து, அமைதற்கு அமைந்த – பொருத்தமாக அமைந்த, நம் காதலர் – என்னுடைய காதலர், அமைவிலர் ஆகுதல் -  பொருந்தாதவராய் ஆகியதால், நோம் என் நெஞ்சே – நோகும் என் நெஞ்சு

கருத்துரை: 


நோகும் என் நெஞ்சு, நோகும் என் நெஞ்சு,  இமைகளைத் தீயச் செய்யும் என் கண்ணீரைத் துடைத்து  எனக்கு பொருத்தமாக இருந்த என் காதலர்  இப்பொழுது பொருந்தாதவராக ஆகி விட்டார்.  நோகும் என் நெஞ்சு.



============== 
Kurunthokai 4 Situation: Thalaivi is seperated from thalaivan hence she utters this poem.