குறுந்தொகை
5,
இயற்றியவர் : நரிவெரூ உத்தலையார்,
நெய்தல் திணை
தலைவி சொன்னது
அது கொல் தோழி காம நோயே
வதி குருகு உறங்கும் இன் நிழல்
புன்னை
உடை திரைத் திவலை அரும்பும் தீ
நீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல் இதழ் உண் கண் பாடு ஒல்லாவே.
பொருள்:
அதுகொல் தோழி - இந்தத் தன்மை உடையது தானா , காம நோயே – காதல் நோய், வதி குருகு – வாழும் குருகுகள், உறங்கும் – தூங்கும், இன் நிழல் – இனிய
நிழல், புன்னை – புன்னை மரம், நாகம், உடை திரை – உடைக்கும் அலைகள், திவலை – நீர்த்
திவலை, அரும்பும் – மலரச் செய்யும், தீ – இனிய, நீர் – கடல்
நீர், மெல்லம்புலம்பன் – கடற்கரைத் தலைவன், பிரிந்தென – பிரிந்ததால்,
பல் இதழ் – பல
இதழ்கள், உண்கண் – மை உண்ட கண்கள், பாடு ஒல்லாவே – தூங்க
இயலாது
கருத்துரை :
குருகுகள் உறங்குவதற்கு இடமாகிய
இனிய நிழலையுடைய புன்னை மரங்களை கொண்டவனும், கரையை அலைகள் மோதும்போது உடைகின்ற நீரால்
வீசப்படும் துளியால் அரும்புகின்ற கண்ணுக்கு இனிதாகிய நீர்ப்பரப்பையுடைய மெல்லிய கடற்கரையையுமுடைய
எம் தலைவன் எம்மை விட்டுப் பிரிந்ததால் பல இதழ்களையுடைய தாமரை மலரைப் போன்ற கண் மை
இட்ட எம்கண்கள் காம நோயால் தூங்க முடியாதவை ஆக ஆகி வாடுகின்றன. இது தான் காதல் நோயின்
தன்மையோ?