குறுந்தொகை – 20

குறுந்தொகை 20
பாலை திணை-

ஆசிரியர் கோப்பெருஞ் சோழன்

அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து,
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை, நாமே!
              -கோப்பெருஞ் சோழன்


தலைவன் தான் பொருள் தேடச் செல்லப்போவதைத் தோழியிடம் சொல்கிறான். அதனைத் தோழி தலைவியிடம் சொல்கிறாள். அதைக் கேட்ட தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

மனைவியைத் தனியே விட்டுவிட்டுப் பொருள் தேடச் செல்பவர்கள் யாரிடத்திலும் அன்போ, அருளோ இல்லாதவர்கள். அவர்கள் நெஞ்சுரம் பெற்றவர்கள். நம்மை விட்டுப் பிரியும் அவரும் அத்தகைய உரம் பெற்றவர்தான். அந்த உரவோர் உரவோராகவே இருந்துவிட்டுப் போகட்டும். நாமெல்லாம் மடமைத் தன்மை உடைய மடவோர். மடவோர் மடவோராகவே இருந்துவிடுவோம்.

(மனைவியைத் துறப்பவர் துறவி. துறவி அருள் உடையவர். நம்முடைய இவர் பொருள்மீது பற்றுடையவர் ஆதலால் துறவியும் இல்லை. அருளும் இல்லை. அன்பு என்பது உயிர்கள்மீது காட்டும் உறவு. இவர் நம் உறவைத் துறப்பதால் அன்புடையவரும் அல்லர்)