குறுந்தொகை 6

குறுந்தொகை 6, 
பதுமனார்,
நெய்தல் திணை தலைவி சொன்னது
பரிசப் பொருளை ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த இடத்து ஆற்றாளாகிய தலைவி, நள்ளிரவில் உலகம் முழுதும் உறங்க நான் ஒருத்தி மட்டும் உறங்கவில்லை என தோழி உறங்கியதையும் சுட்டிக்காட்டி தோழியிடம் உரைக்கிறாள்.




நள்ளென் றன்றே யாமம் சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்றி
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மன்ற துஞ்சா தேனே.

பொருள்:
நள்ளென் றன்றே யாமம் நடு இரவு இருட்டாக இருந்தது,  சொல் அவிந்து சொற்கள் அடங்கின,  இனிது அடங்கினரே இனிமையாக உறங்கினர்,  மாக்கள் மக்கள்,  முனிவு இன்றி வெறுப்பின்றி,  நனந்தலை அகன்ற,  உலகமும் துஞ்சும் உலகமும் உறங்கும், ஓர் யான் நான் மட்டும்,  மன்ற நிச்சயமாக,  துஞ்சா தேனே உறங்காமல் இருக்கின்றேன்

கருத்துரை :

நடு இரவு இருட்டாக இருக்கின்றது.  சொற்கள் அடங்கி விட்டன. வெறுப்பு இன்றி இனிமையாக மக்கள் உறங்குகின்றனர். அகன்ற உலகமும் உறங்குகின்றது,  ஆனால் நான் மட்டும் உறங்காமல் இருக்கின்றேன்.