குறுந்தொகை 2,

குறுந்தொகை 2,
இயற்றியவர் : இறையனார்,
குறிஞ்சி திணை
தலைவன் சொன்னது



கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?

பொருள்:  

கொங்கு தேன், தேர் ஆராய்ந்து, வாழ்க்கை வாழ்க்கை,  அம் அழகிய, சிறை சிறகு, காமம் (நான்)  இன்புற,  செப்பாது சொல்லாமல்,  கண்டது கண்டதை,  மொழிமோ கூறுவாயாக,  பயிலியது என்னோடு முன்பே பொருந்திய, கெழீஇய உரிமையான, நட்பின் நட்பினை உடையவளான, மயில்இயல் மயில் போன்ற,  செறி வரிசையான,  எயிற்று -பற்களும்,  அரிவை பெண், கூந்தலின் கூந்தலின்,  நறியவும் மணமும்,  உளவோ- உள்ளனவா, நீ நீ,  அறியும் அறிந்த,  பூவே-பூக்களிலே

கருத்துரை :

பூக்களைத் தேர்ந்து ஆராய்ந்து தேன் உண்ணும் வாழ்க்கையையும் அழகிய சிறகினையும் இயல்பாய்க் கொண்ட வண்டே!
நீ எனது நிலத்திலுள்ள வண்டு என்பதால் நான் இன்புற வேண்டும் என்பதற்காக என்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப உரைக்காமல், நீ உண்மையாகவே அறிந்து கண்டதைக் கூறுவாயாக. எழு பிறப்பிலும் என்னோடு பொருந்திய, உரிமை நட்பினைக் கொண்டவள் என் தலைவி.  மயில் போன்ற மென்மையும் வரிசையான செறிவான பற்களும் கொண்ட அவளின் கூந்தலிலே வீசுகின்ற மணத்தைப் போல, நீ அறிந்த மலர்களிலே மணமுடைய மலர்களும் உள்ளனவா?”


http://karkanirka.org/2012/06/07/bees-truth-and-the-great-love-kurunthokai-2-3-audio-rendition/ Kurunthokai 2 Poet: Irayanar Situation: Thalaivan said this to Thalaivi during their pre martial union. He addresses the bee to ease her embarrassment.